ஒரு வரம் வேண்டும்.
பரந்தோம்பிய புவியின்
பரப்பளவை
பாறைகள் தாண்டி
பல நதிகளும்
பெரு கடல்களும் தாண்டி
கால் நடையாய் கடந்திடவும்
தயார்!
வரம் தர ஒருவன் உன்,
ஓர் வாக்கு கிட்டுமெனில்,
இருள் அறையில்
ஈராயிரம் இரவுகள்
இருந்திடலாம்,
இடை நடுவில்
இடைவேளைகளும் துறந்திடலாம்.
வரம் மட்டும் வருமெனில்!
புயல் காற்றிலோ
புழுதி மேட்டிலோ
புதைந்திடலாம்.
புறம் படர்த்தி
அணல் வெயிலில்
அமர்ந்திடலாம்.
வரம் வருவது நிஜமெனில்!
அகிலம் ஆழ ஆசை இல்லை,
அடங்கட்டும் பேராசை.
சாகா வரம் தேவையில்லை,
சாபமது நப்பாசை.
குயில் போன்ற குரல் வேண்டாம்.
அழகான உருவமும் வேண்டாம்.
நீ தந்ததெல்லாம் வரத்திலும் வரங்கள்.
என்னில் அழகாய் உள!
ஆனாலும் ஓர் வரம் வேண்டும்.
கிட்டுமெனில்,
அரை நொடி வாழ்ந்திட்டும் இறந்திடலாம்.
பெண் ஆசை பொல்லாது.
பெண்கள் வேண்டவே வேண்டாம்!
மண் ஆசை
மக்கும் வரை,
மண் துகள் கூட வேண்டாம்!
அறிவும் வேண்டாம், ஆற்றலும் வேண்டாம்.
நீ தந்தது போதும்
அகிலம் அரங்கேற்ற!
ஆனாலும் ஒரே வரம்
அவசியம் வேண்டும்.
என்
ஆயுள் அடங்குமுன்!
நான் கொண்டேன் அலட்சியம்,
உள்ள பொது
அந்த உன்னதம்.
வான் கொண்டாய் நீ, அதனால்
உணர்ந்திட்டேன் அவள் அவசியம்!
அனுப்பி விடு.
ஒரு நொடி போதும்.
நான் மடி சாய
அவள் தலை கோத
சுவர்க்கமே துச்சமாகும்
அந்நொடி வேண்டும்!
மீண்டும் மண்ணில்
என் தாய் வேண்டும்!




